இரு ஆய்ச்சிகளின் தோள் மேல் கை போட்டுக் கொண்டு, அவர்களையே காவடியின் இரு பக்கங்கள் போல ஆக்கி, குடத்தின் மேல் ஏறிக் கூத்து ஆடுவான்! குடமாடு கூத்தன்-ன்னும் பேரும் வாங்கிக்குவான்!

காவடி ஆட்டத்துக்கு-ன்னே பாடப்படுவது காவடிச் சிந்து-ன்னு உங்க எல்லாருக்குமே தெரியும்!
பெரும்பாலும் பண்டைய நாட்களில் தல யாத்திரைக்கு எளிய கிராம மக்கள் நடந்து தான் போவாங்க! இன்னிக்கும் சில பேரு அப்படிப் பழனிப் பாத யாத்திரை, திருப்பதிப் பாத யாத்திரை-ன்னு போறாங்க!
அப்போ, வழியில் களைப்பு தெரியாம இருக்க பாடப்படும் வழிநடைச் சிந்து தான் காவடிச் சிந்து! கிராம மக்களே பாடுவதால், ரொம்ப கடினமான சொற் செட்டு எல்லாம் இல்லாமல் ரொம்பவும் லோக்கலா இருக்கும்!
ஆனால், இதன் துள்ளலும் பீட்டும், இந்தச் சிந்து வகைப் பாடல்களை, மக்களிடையே மிகவும் பிரபலம் ஆக்கியது! இதனால் இது கொஞ்சம் கொஞ்சமாக இலக்கியங்களிலும் தலை தூக்க ஆரம்பித்தது! இசைக் கச்சேரிகளிலும் நுழைந்து கொண்டது!

படிக்காதவங்க பாடும் பாட்டு, படிச்சவங்க கையில் சிக்கினா என்ன ஆகும்?
= அதே தான் காவடிச் சிந்துக்கும் ஆகியது! :)
அந்தப் பாட்டுக்கு-ன்னு ராகம் கூடப் போட்டு, ஒரு டெம்ப்ளேட் உருவாக்கிட்டாங்க!
செஞ்சுருட்டி இல்லீன்னா சிந்து ராகம்!
- இது இரண்டில் தான் காவடிப் பாட்டுக்கள் இப்போது பெரும்பாலும் பாடப் படுகின்றன!
ஆனா ராகம்-ன்னா என்னன்னே தெரியாமல், கிராமத்தில் போடும் மெட்டு இருக்கு பாருங்க! அந்தத் துள்ளலும் அனுபவமும் எந்த ராகத்திலும் வராது! சும்மா பாட்டைக் கேட்டாலே போதும்,
தையத் தையத் தக்கத், தையத் தையத் தக்கத்
தையத் தையத் தக்கத் தானா-ன்னு கால்கள் தானாவே ஆடும்! :)
சின்ன வயசுல (மூனாங் கிளாஸ்-னு நினைக்கிறேன்) என்னைய திருப்பதிக்குக் கூட்டிக்கிட்டு போயிருக்காய்ங்க வூட்டுல!
விளையும் பயிர் தான் முளையிலேயே தெரியுமாமே! சரியான டகால்டி பார்ட்டின்னு அப்பவே என்னை முடிவு கட்டிட்டாங்களாம்! :-)
ஏன்னா....திருப்பதியில நான் அரோகரா அரோகரா-ன்னு கூவிக்கிட்டு இருந்தேனாம்!
வர்ற வழியில, திருத்தணியில் ஹால்ட்டு! அங்கிட்டு மக்கள் காவடி ஆடும் போது, நான் கோவிந்தா கோவிந்தா-ன்னு கோஷம் போட்டுக்கிட்டு இருந்தேனாம்! :)
நான் கல்லூரி லெவலுக்கு வந்த பின்னும் கூட, இதச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாங்க எங்க மறைந்த ஆயா!(பாட்டி)
நான் மட்டும் தான் இப்படி டகால்ட்டி பேர்வழின்னு நெனைக்கறீங்களா?
நம்மள விட ஒருத்தர் செம டகால்ட்டியா இருக்காரு! ஆனா அவரு ஒரு ஆழ்வாரும் கூட! :)
கழுகு மலை ஆலய முகப்பில், அப்போதைய ராகவன்! :)
சரீ...இந்தக் காவடிச் சிந்தை, தமிழ் இலக்கிய லெவலுக்கு முதலில் கொண்டாந்தது யாரு?
காவடிச் சிந்து-ன்னாலே அது அண்ணாமலை ரெட்டியார் தானே!
திருநெல்வேலி, சென்னிக்குளம் இவரு சொந்த ஊரு! சென்னிக்குளம் முருகன், கழுகுமலை முருகன் - இவிங்க ரெண்டு பேர் மேலேயும் இவரு போட்ட காவடிச் சிந்துப் பாட்டுக்கள் எக்கச்சக்கம்!
இன்னிக்கும் கச்சேரிகளில் காவடிச் சிந்து-ன்னா இவரு பாட்டு தான்! இத்தனைக்கும் இவரு வீட்டுல அத்தினி பேரும் தெலுங்கு பேசறவங்க! :)
அண்ணாமலை ரெட்டியாரைப் போல நிறைய பாடலீன்னாலும்,
* ஊத்துக்காடு வேங்கட கவி
* பாரதியார்
* பாபநாசம் சிவன்
- இவிங்க எல்லாம் கூட, கொஞ்சம் கொஞ்சம் பாடி இருக்காய்ங்க!
ஆனால் அண்ணாமலை ரெட்டியார் உட்பட, இத்தினி பேரும் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவங்க! அண்ணாமலை ரெட்டியாரின் காலம் 1865!
ஊத்துக்காடு அவருக்கு கொஞ்சம் முன்னாடி! பதினெட்டாம் நூற்றாண்டு!
அப்போ அதுக்கு முன்னாடி எல்லாம் காவடிச் சிந்து இல்லீயா? சும்மா இப்போ தோன்றியது தானா?
அட, காவடி என்பது முருக பக்தர்கள் காலம் காலமா எடுத்துக்கிட்டு வராங்களே? அப்படி இருக்க, காவடிச் சிந்து-ங்கிறதும் ரொம்ப நாளா இருக்கணுமே!
சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாடல் சொல்லப்பட்டிருக்கு! ஆனால் ஏனோ காவடி பற்றிய குறிப்பு சொல்லப்படவில்லை! நக்கீரரும் காவடி பற்றி ஒன்னுமே சொல்லவில்லை!
சரி சங்க காலம் வேணாம்! விடுவோம்! அருணகிரியாச்சும் காவடிப் பாட்டு போட்டு இருக்காரா? அட, எனக்குத் தெரிஞ்ச வரை, இது தாங்க ரொம்ப ஆச்சரியமா இருக்கு!
அருணகிரியார் கூட ஏனோ காவடிச் சிந்து மெட்டுக்களைத் திருப்புகழில் வைக்கவில்லை!
சந்தத்துக்குன்னே பொறந்த சொந்தக் கவி அவரு!
அவரு கூட காவடிச் சிந்தைப் பாடாதது, எனக்கு இன்னி வரை வியப்பிலும் வியப்பு தான்!
அப்போ யாரு தான் காவடிச் சிந்தைத் தமிழ் இலக்கியத்தில் மொதல்ல போட்டிருப்பாங்க-ன்னு நினைக்கறீங்க? = ஹிஹி! ஹைய்யோ என்னைய அடிக்க வராதீக! :)
ராபின்ஹூட் ஆழ்வார்-ன்னு நான் கலாட்டா பண்ணும், திருமங்கை ஆழ்வார் தான்,
இதை லேசு மாசா அறிமுகப் படுத்திட்டுப் போயிருக்காரு! கி.பி. 9-ஆம் நூற்றாண்டு!
என்னா? ஆச்சரியமா இருக்கா? வழக்கம் போல கேஆரெஸ் வைணவ டகால்ட்டி பண்ண ஆரம்பிச்சிட்டான்-ன்னு தோனுதா! ஹிஹி!
இது மாதவிப் பந்தல் இல்லை!
என் தோழனும் நானும் இருக்கும் "இனியது கேட்கின்" வலைப்பூ!
இன்னிக்கி-ன்னு பார்த்து இங்கே இந்தக் காவடிப் பதிவைப் போட வச்சதும் என் ஆசை முருகப் பெருமானே!
திருமங்கை ஆழ்வார் உண்மையான பேரு நீலன்! செம ஹாட் பார்ட்டி! :)
இவரு கையில் எப்பவும் ஒரு வேல் வேற வச்சிக்கிட்டுத் திரிவாரு! படத்தில் பாருங்க!

"வேல் ஏந்திய ஒருத்தர்" தான், வழிநடைச் சிந்து என்னும் காவடிச் சிந்து கிராமத்துப் பாடல்களை.....
தமிழ் இலக்கியத்துக்குள் முதலில் கொண்டு வந்து அறிமுகப்படுத்தணும்-ன்னு இருக்கு போல!
ஆனால் ஆளு 9-ஆம் நூற்றாண்டு இல்லையா? அதுனால அந்தக் காலத்து தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டாந்து, இவரோட வழிநடைச் சிந்தில் போடுறாரு!
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள "நந்திபுர விண்ணகரம்" என்ற திவ்ய தேசத்துக்கு போறாரு! அப்போ களைப்பு தெரியாம இருக்க, இப்படிப் பாடி-ஆடிக்கிட்டே போறாரு!
நீங்களே கேளுங்க! சூப்பர் கிராமிய மெட்டு! செம பீட்டு!
கேட்டுக்கிட்டே பதிவை மேல படிங்க!
Thiru_Nandipura_Vinnagaram.mp3 - Vazhi Nadai Chinthu!
OR (If you are not able to hear the above track of 00:01:48, fully on imeem,
Herez the esnips audio. There is a short intro. The song starts from 00:00:40)
|
தீதறு நிலத்தொடு, எரி-காலின் - ஓடு,
நீர்கெழு விசும்பும் அவையாய்,
மாசறு மனத்தினோடு உறக்கமொ(டு)
இறக்கை அவை-ஆய பெருமான்!
(நிலம்-நெருப்பு-கால்/காற்று-நீர்-ஆகாயம்-ன்னு ஐம்பூதங்களுமாய் இருக்கான்!
மாசில்லா மனத்தில் உறக்கம்/கனவு-ன்னு உறைந்து இருக்கான் பெருமான்!)
தாய் செற, உளைந்து, தயிர் உண்டு - குடம்
ஆடு தட மார்வர், தகை சேர்
நாதன் உறைகின்ற, நகர் நந்தி - புர
விண்ணகரம் நண்ணு மனமே! - புர
விண்ணகரம் நண்ணு மனமே!
(தாய் கோவிச்சிக்க, ஓளிஞ்சி ஓடி, தயிர் குடிச்சி, குடத்தின் மேல் ஆடும் கூத்தன்!
தட மார்பு, தகை சேர்ந்த அவன் நாதன்! அவன் வாழும் இடம் நந்திபுர விண்ணகரம்! அதை அடை மனமே!)
தந்தை மனம் உந்த, துயர் நந்த - இருள்
வந்த விறல், நந்தன் மதலை!
எந்தையிவன் என்று, அமரர் கந்த - மலர்
கொண்டு தொழ நின்ற நகர்தான்!
(வசுதேவன் சிறையில் பயப்பட, துயர் படர, இருட்டில் கோகுலம் வந்து சேர்ந்த நந்தகோபனின் குழந்தை!
எங்கள் பெருமான் என்று எல்லாரும் கந்த மலர் தூவித் தொழுபவன் இவன்! இவன் ஊரு இது!)
மந்த முழவு ஓசை, மழையாக - எழு
கார் மயில்களாடும், பொழில் சூழ்,
நந்தி பணி செய்த, நகர் நந்தி - புர
விண்ணகரம் நண்ணு மனமே! - புர
விண்ணகரம் நண்ணு மனமே!
(முழவு என்னும் மத்தள ஓசை தொடர்ந்து எழ, மயில்கள் பொழிலில் ஆட,
நந்திகேஸ்வரர் பெருமாளுக்குப் பணி செய்த நந்திபுர விண்ணகரம்! அதை அடை மனமே!)
![]() | ![]() |
சரி, இப்போ என் ஆசை முருகன் மேல் உள்ள ஒரு காவடிச் சிந்தைப் பார்க்கலாமா? அண்ணாமலை ரெட்டியார் போட்டது தான்!
இதைப் பார்த்தா, காவடிச் சிந்து, எப்படி காலத்துக்கு ஏற்றாற் போல்,
லைட்டா உரு மாறி இருக்கு-ன்னு தெரிஞ்சீரும்!
அதே மூனு மூனு சீராப் பாடும் சந்தச் சீர்கள் தான்!
ஆனால் மூன்றாம் அடியில் மட்டும் மூனு சீராப் பாடாது,
வேகத்துக்காக இன்னும் கொஞ்சம் இழுக்கறாங்க! அதனால் பீட்டு இன்னும் கூடுது! "போடேய்"-ன்னு தாளத்தை இன்னும் கூட்டுது! கேட்டுக்கிட்டே படிங்க!
உன்னி கிருஷ்ணன் பாடுவது, இங்கே!
ஆனா பித்துக்குளி பாடி இருந்தா இன்னும் லோக்கலா நல்லாக் கும்மியிருப்பாரு! :)
சென்னிக்குள நகர் வாசன் - தமிழ்த்
தேரும் அண்ணாமலை தாசன் - செப்பும்
ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்-புனை
தீரன் அயில் வீரன்
வண்ண மயில் முருகேசன் - குற
வள்ளி பதம் பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்-வர
வாதே சொல்வன் மாதே
அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல
அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்-செவி
அடைக்கும் அண்டம் புடைக்கும்
கருணை முருகனைப் போற்றி - தங்கக்
காவடி தோளில் ஏற்றி - கொழும்
கனலேறிய மெழுகாய்வரு பவரே வருமே-கதி
காண்பார் இன்பம் பூண்பார்.
ரெண்டு சிந்தையும் கேட்டுட்டு, நீங்களும் கூடவே பாடிப் பாருங்கள்!
அப்போ தெரியும், கால்கள் தானே ஆடுகிறாதா என்று! :-)
காவடியா, உன்னடி கா அடியா? எம்மைக் கா அடியா! காக்கும் அடியா!அரகரோகரா!!
![]() | ![]() |
மேலே மலேசிய பத்து மலைக் காவடிய உத்துப் பாருங்க! என்னாத் தெரியுது?
அது எப்படிங்க தைப்பூசம் காவடி-ல நாமம், சங்கு, சக்கரம் எல்லாம் இருக்கும்? மலேசிய மக்கள் யாராச்சும் இந்த வழக்கம் பத்தி வந்து சொன்னீங்க-ன்னா புண்ணியமாப் போவும்! :)
நந்தி பணி செய்த, நகர் நந்தி புர
விண்ணகரம் நண்ணு மனமே!
கழுகு மலை முருகனுக்கு அரோகரா! அரோகரா!!
(குறிப்பு: அம்மா குருவாயூர் போயிட்டு, அங்கிருந்து இன்னிக்கி கழுகு மலை போயிருக்காங்க, என் சார்பாக, காவடி எடுக்க! அதான் இந்தச் சிறப்புப் பதிவு!)
References: இதர காவடிப் பதிவுகள்:
முருகனருள் வலைப்பூவில்:
தைப்பூசம்: குத்துப் பாட்டு=கிளிக் கண்ணி+காவடிச் சிந்து!
கே.ஆர்.எஸ் பிறந்தநாள் முருகன் பாட்டு
100ஆம் பதிவு! பதிவர்கள் எடுக்கும் ஆறுபடைக் காவடிச் சிந்து!
வள்ளியைத் தொட்டு - காவடிச் சிந்து
காவடி ஆட்டமா! - காவடிச் சிந்து பாட்டமா!
கண்ணன் பாட்டு வலைப்பூவில்:
முருகனுக்கு மட்டுமா? கண்ணனுக்கும் காவடி எடுக்கறாங்க டோய்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
கண்ணன் பிறந்தான்! எங்கள் மன்னன் பிறந்தான்!




![[crossword_answers.jpg]](http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SV2DQN5HjpI/AAAAAAAAGEQ/2rv3Y85nHUc/s1600/crossword_answers.jpg)